Breaking

Wednesday, 24 January 2018

போக்குவரத்து ஸ்டிரைக்; முடங்கிப்போனது கேரளா! எல்லையில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்

பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்றும், அதன்மூலம் பெட்ரோலியப் பொருள்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேரள மாநில கூட்டுப் போராட்டக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து வர்த்தகர்கள் மற்றும் மோட்டார் வாகன உரிமையாளர்கள் அடங்கிய குழுவினர் இன்று (24ம் தேதி) காலை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பி.எம்.எஸ் தொழிற்சங்கத்தைத் தவிர அனைத்து தொழிற்சங்கத்தினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருப்பதால், மாநிலம் முழுவதும் பேருந்துப் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. கேரள மாநில போக்குவரத்து ஊழியர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். பேருந்துகள் இயங்காததால், கேரளா பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கண்ணூர் பல்கலைக் கழகம், ஹெல்த் சயின்ஸ் யுனிவர்சிட்டி ஆகியவற்றில் இன்று நடப்பதாக இருந்த தேர்வுகள், நாளைக்கு (25-ம் தேதி) தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பள்ளிகளுக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டம் காரணமாக, தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.

குமரி மாவட்டத்திலிருந்து கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்துக்குச் செல்லும் பேருந்துகள், காலை முதலே இயக்கப்படவில்லை. அதிகாலையில் இயக்கப்பட்ட ஒரு சில பேருந்துகளும் மார்த்தாண்டம் வரை மட்டுமே இயக்கப்பட்டன. நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக புனலூர், கொல்லம், எர்ணாக்குளம் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை. அதே போல, கேரளாவிலிருந்தும் பேருந்துகள் வரவில்லை. கேரளாவில் போக்குவரத்து முழுமையாக முடங்கிக்கிடப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment