Breaking

Monday, 8 January 2018

இயற்கை உழவர் அறுவடை பெருநாளைக் கொண்டாடிய முன்மாதிரி விவசாயி!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ளது எஸ்புதூர் ஒன்றியம் உலகம்பட்டி கிராமம். இந்த ஊரில் சிவராமன் என்பவர், விவசாயத்துக்குச் செயற்கை ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிர் விளைவித்துவருகிறார். குறிப்பாக கிச்சடி சம்பா, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, பூங்காறு, இளகி, சேலம் சம்பா போன்ற பழைமையான நெல் ரகங்களை வைத்து விவசாயம் செய்துவருகிறார்.

மேலும், தமிழகத்தில் கோவை, சென்னை, தேனி, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் என பல்வேறு மாவட்டத்தில், விவசாயக் கல்வி படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம்குறித்து பயிற்சி கொடுத்துவருகிறார். பல்வேறு மாவட்டங்களில் இருந்தெல்லாம் வந்து இவரிடம் விதை நெல் வாங்கிச் செல்கின்றனர். இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இயற்கை உழவர் அறுவடை பெருநாள் இந்த கிராமத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது, நம்மாழ்வாருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு 100-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாய ஆர்வலர்கள் ஒன்று கூடி நெல் விளைந்திருந்த நிலத்தில் அறுவடை செய்தனர். அப்போது, அறுவடைக்கான கிராமியப்பாடலுடன் வயல்களில், கறுக்கு அருவாளுடன் விவசாய இளம் விஞ்ஞானிகள் களமிறங்கினார்கள். நெல் கதிர்களை அறுத்தும், இயற்கை விவசாயம்குறித்து குதாகலித்தும் இயற்கை உழவர் அறுவடைப் பெருநாள் விழாவை கொண்டாடினார்கள். அதன் பிறகு அவர்களுக்கு காலை உணவாக கேப்பை கூழ், கம்மங்கூழ், கஞ்சி பறிமாறப்பட்டது. மதிய உணவாக மாப்பிள்ளை சம்பா சாதம், சாம்பார், ரசம், மோர் என சைவ சாப்பாடு வழங்கப்பட்டது. இந்த விழாவை அந்தக் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியோடு பார்த்து ரசித்தார்கள்.

No comments:

Post a Comment