தமிழ்நாட்டிலேயே இயற்கை விவசாயம், அதை வலியுறுத்திய நம்மாழ்வார் ஆகியோரை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நம்மாழ்வார் தொடங்கிய குடும்பம் அமைப்பு நடத்தும் இயற்கைப் பண்ணையில், இயற்கை விவசாயம், சூழலியல் பற்றி அறிந்துகொள்ள ஸ்வீடனில் இருந்து வந்திருக்கிறார்கள் மாணவிகள். ப்ரெட், ஜாம் என்று உடலுக்கு உன்னதம் தராத துரித உணவுகளையே இதுவரை சாப்பிட்டு வந்த அவர்கள், இங்கே கம்பங்கூழ், ராகி ரொட்டி என்று சாப்பிட்டு, அதன் ருசிக்கு அடிமையாகியிருக்கிறார்கள். அதோடு, இயற்கை வேளாண்மை, இயற்கையைக் காக்க இங்கே ஏற்பட்டிருக்கும் எழுச்சிக்குக் காரணமான நம்மாழ்வார் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டபின், "இனி எங்கள் உணவு கூழ்தான். குரு நம்மாழ்வார்தான்" என்று சிலாகித்துச் சொல்கிறார்கள்.
நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட குடும்பம் அமைப்பு, புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில் உள்ள ஒடுகம்பட்டியில் இயங்கி வருகிறது. அங்கே இயற்கைப் பண்ணை, இயற்கை வாழ்வியல், வயல், பள்ளி என்று அமைத்து, இயற்கை ஆர்வலர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள். அந்த வகையில், இங்கே ஒரு வருட கோர்ஸ் படிக்க ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இல்வாவும், ஐரினும், ஃபெலிசியாவும் வந்திருக்கிறார்கள். அவர்களின் இயற்கை குறித்த ஆர்வத்தைப் போற்றும்விதமாக சமீபத்தில் கரூர் மாவட்டம், வானகத்தில் நடந்த நம்மாழ்வார் பிறந்தநாள் விழாவில் அவர்களை அழைத்து வந்து கௌரவித்தார்கள்.





No comments:
Post a Comment