Breaking

Thursday, 19 April 2018

சூர்யாவின் வீரம் பாராட்டத்தக்கது! சிறுவனுக்கு கைக்கொடுத்து பாராட்டிய போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன்

'திருடன் தன்னைத் தாக்க முயன்றபோதும், விரட்டிச்சென்று பிடித்த சிறுவன் சூர்யாவின் மன உறுதி பாராட்டத்தக்கது' என்று சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் அமுதா. மகப்பேறு மருத்துவரான இவர், வீட்டின் கீழ்தளத்தில் கிளினிக் நடத்திவருகிறார். அவர் தனியாக இருந்த நேரத்தில் கிளிக்கில் புகுந்த திருடன், அவரிடமிருந்த 10 பவுன் நகையைத் திருடிக்கொண்டு ஓடினான். அதனைப் பார்த்த கிளினிக் எதிர்புறம் இருக்கும் கடையில் வேலைபார்க்கும் 17 வயது சிறுவன் சூர்யா, திருடனைத் துரத்திப்பிடித்து, நகையை மீட்டுக் கொடுத்தான்.

அதையடுத்து, சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்த நிலையில், சிறுவன் சூர்யாவை காவல் ஆணையாளர் விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டினார். மேலும், சூர்யாவைப் பாராட்டி காவல்துறை சார்பில் நிதியும் அளித்தார். அப்போது பேசிய அவர், 'திருடன், தன்னை விடப் பெரியவராக இருந்தாலும், அவரைப் பிடிக்க முடியும் என்று எண்ணிய சிறுவனின் செயல் பாராட்டுக்குரியது. திருடன் தாக்க முயன்றபோதும், விரட்டிச்சென்று பிடித்த மனஉறுதி பாராட்டத்தக்கது.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் இத்தகைய குற்றங்களுக்கு எதிராகத் தைரியமாக முன்வர வேண்டும். அவ்வாறு தைரியமாகச் செயல்படுபவர்களுக்கு, காவல்துறை பக்கபலமாக இருக்கும். சென்னையில் நடைபெறும் மொபைல் பறிப்பு சம்பவங்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்ததார்.

அடுத்ததாகப் பேசிய சிறுவன் சூர்யா, 'திருடனைப் பிடிக்கச்சொல்லி நான் கத்தியபோது, பொதுமக்கள் அனைவரும் வேடிக்கைபார்த்தனர். எனக்கு, திருடனைப் பிடிக்க முடியும் என்று நம்பிக்கை இருந்தது. அதனால், துரத்திச்சென்று பிடித்தேன்' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment