ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ஏ.பி. டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 8 மணிக்குத் தொடங்கிய இரண்டாவது போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணிக் கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். துவக்கத்தில் மோசமாக விளையாடிய டெல்லி அணியை ஸ்ரேயஸ் ஐயரும், ரிஷப் பண்ட் ஜோடி சரிவில் இருந்து மீட்டது. ஸ்ரேயஸ் ஐயர் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்த பண்ட், அரை சதத்தை பூர்த்தி செய்து 85 ரன்களில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
175 எடுத்தால் வெற்றி என்ற இலக்கைக்கொண்டு களமிறங்கிய பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக குவிட்டன் டி காக்கும் மனன் வோஹ்ராவும் களமிறங்கினர். 2 ரன்னில் வோஹ்ரா வெளியேற, அவரைத் தொடர்ந்து டி காக்கும் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கோலி - டிவில்லியர்ஸ் ஜோடி நிதானமாக விளையாடியது. 30 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்ஷல் படேல் வீசிய பந்தை மிட் விக்கெட் திசையில் சிக்ஸருக்கு அனுப்ப முயற்சித்தார் கோலி. அதனை சாதுர்யமாக கேட்ச் பிடித்து கோலிக்கு அதிர்ச்சி கொடுத்து வெளியே அனுப்பினார் போல்ட். பின், தன் ஸ்டைலில் அதிரடியாக விளையாடிய டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 90 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இறுதியாக 18 -வது ஓவர் முடிவில், பெங்களூர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்ற பெங்களூர் தற்போது புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.




No comments:
Post a Comment